Friday, June 15, 2012

ஒரு கைதியின் சட்டங்கள்

பெரும்பாலும் நாம் அனைவருக்கும் அணைத்து சட்டமும்    தெரிந்திருப்பதில்லை ,தெரிந்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை . ஆனால் தனக்கு  வயிற்றுவலி என்ற போது தான் வலியும் வேதனையும் உணரபடுகிறது... விழிப்புணர்வும் தேவைபடுகின்றன ...

அந்த வகையில் குற்றவியல் சட்டத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் கைது! கைது செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் என்னென்ன ? ஒரு வேலை நாளை நமக்கே இந்த நிலை நேரிட்டால் என்ன செய்வது ?

கைது செய்யப்படும் நபர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தான். எனவே அவர் குற்றவாளி என சட்டப்படி தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும் என்கிறது சட்டம் .


காவல் நிலைய வன்முறை:
காவல் நிலைய வன்முறைகள் மிகவும் அதிகமாக  நடைபெறுவதை கவனித்த (ஓய்வு பெற்ற) நீதிபதி திலிப் குமார் பாசு, இந்த பிரசினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 26-08-1986 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற காவல் நிலைய வன்முறைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை இணைத்திருந்த நீதிபதி டி.கே.பாசு, காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.      ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.            கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.    கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.    கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.    கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.   கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.          நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளன
இதற்கிடையில் கைது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மிக விரிவான விவாதங்களை நடத்தியது. நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட்ட கைது சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்த சட்டமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி: மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
Reference:http://www.makkal-sattam.org/2012/05/blog-post.html


வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls