Wednesday, June 20, 2012

உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்…

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.

சரி விகித உணவுகள்

காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

சூடான நீர்

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

வீட்டு உணவுகள் சாப்பிடலாம்

3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்,.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

பி பாசிட்டிவ்

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்

-Posted by: Mayura Akilan
-நன்றி :ஒன் இந்தியா
source :http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/white-foods-avoid-aid0174.html
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls