
BPO பணியாளர்களும், மனித உரிமைகளும்:
இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்த தொழில்நுட்ப கல்வியும் பெற்றிருக்க வேண்டியதில்லை.
இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்த தொழில்நுட்ப கல்வியும் பெற்றிருக்க வேண்டியதில்லை.
நுனிநாக்கு ஆங்கிலமும் சிறிதளவு கணிப்பொறி அனுபமும் இருந்தாலே போதும்; இவர்கள், தங்களுக்கு முந்தைய தலைமுறை கனவிலும் கண்டிடாத தொகையை சம்பாதிக்கலாம். “BPO” என்று அழைக்கப்படும் அவுட்சோர்சிங் (OUTSOURCING) நிறுவனங்களே இத்தகைய வாய்ப்புகளை வழங்குகின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகளின் வங்கி, ஆயுள்காப்பீடு, மருத்துவம், சட்டம், நுகர்பொருள் விற்பனை உள்ளிட்ட துறைகளின் வாடிக்கையாளர் சேவைகளை இந்தியாவிலிருந்தே செய்யும் இந்தத்துறை இந்தியாவின் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை மிகவும் மாற்றி அமைக்கிறது. இந்நிறுவனங்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக மத்தியதர மக்களிடத்தே ஒரு புதிய மேல்தட்டு வர்க்கமே உருவாகியுள்ளது எனலாம்.
...
மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பெற்றவர்கள் கனவிலும் நினைக்கமுடியாத ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதாரமே இவர்களை நம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
...
பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறுநகரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்த தொழில் நிறுவனங்கள், இன்றைய இளைஞர்களின் கனவு உலகமாக விரிகிறது. பச்சைப்பசேலென்று இருக்கும் அவரைப்பந்தலைப்போல கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த துறையின் உள்ளே பார்த்தால் தூண்கள் அனைத்தும் இற்றுப்போய் இருக்கின்றன.
இந்தத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அனைவரும், ஆங்கிலம் கற்றிருந்தாலும், அபரிமிதமான ஊதியம் பெற்றாலும், பொது அறிவில் சற்று பின் தங்கியே உள்ளனர். குறிப்பாக தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இவர்களிடம் அறவே இல்லை என்று கூறலாம். இவர்களின் இந்த நிலையை பயன்படுத்தி அரசுத்துறை அமைப்புகளும், பிற தனியார் அமைப்புகளும் இவர்களை சுரண்டி கொழுக்கின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒரு குடிமகனுக்கு சமூக, பொருளாதார, கலாசாரம் தொடர்பான பல்வேறு உரிமைகளை உறுதி செய்துள்ளது (படிக்காத பாமர மக்கள் பெருவாரியானவர்களுக்கு இவ்வுரிமைகள் கிடைக்கவில்லை என்பது வேறு கதை). ஆனால், மெத்தப்படித்து ஆங்கில கல்வி பெற்ற காரணத்தாலேயே வேலைவாய்ப்பையும் பெற்ற BPO பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கிறதா? என்று பார்த்தால், “இல்லை!” என்ற பதிலே நமக்கு கிடைக்கக்கூடும்
ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, போதிய விளக்கம் பெறாமல் அல்லது போதிய அவகாசம் கொடுக்காமல் ஒருவரை தண்டிப்பதோ, பணியிருந்து நீக்குவதோ இயற்கை நீதிக்கு (NATURAL JUSTICE) எதிரானது. ஆனால் அனைத்து BPO-களிலும் தாரகமந்திரமாக இருப்பது HIRE AND FIRE என்னும் கொள்கையே.
BPO நிறுவனங்களில் பணியில் சேர, ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவேண்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு முன் செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்படாமலே பலரும் இந்த ஒப்பந்த சரத்துகளுக்கு பலியாகின்றனர். ஒப்பந்தம் காலம் முடியும் முன்பே, ஒரு பணியாளர் அப்பணியிலிருந்து விலகினால் அதற்கான அபராதம் நிர்ணயிக்கப்பட்டு அது காசோலையாக பெறப்படுகிறது. இந்த உளவியல் ரீதியான மிரட்டல் காரணமாகவே பலர் பணியிட உரிமை மீறல்களை வெளியில் சொல்வதில்லை. (அந்த காசோலையை சட்டரீதியாக பயன்படுத்த முடியாது என்பது பலருக்கும் தெரிவதில்லை)
“8 மணி நேரம் மட்டுமே வேலை” என்ற உரிமையை போராடி பெற்ற அமெரிக்கர்களின் பணிகளை செய்வதற்கு, நமது இந்திய இளைஞர்கள் 12 முதல் 14 மணி நேரம் வரை உழைக்கின்றனர்.
எப்பொழுதும் நோட்டமிடுகின்ற கேமிராவின் தீவிர கண்காணிப்பிலேயே இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இதுவும் கூட ஒருவித மனித உரிமை மீறலே. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கின்ற வகையிலேயே இவர்கள் பணியாற்றும் சூழல் உள்ளது. குடும்ப உறவுகளுக்கு போதிய நேரம் ஒதுக்காமை, உடல்நலம் குறித்த கவனமின்னம போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இதன் விளைவுகளை மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும், வழக்கறிஞர்களுமே அறுவடை செய்கின்றனர்.
செல்ல பிராணிகளுக்கு அணிவிக்கின்ற கழுத்துபட்டி போல இவர்களும் தங்கள் முழு ஜாதகமே அடங்கிய அட்டையை அணிகின்றனர். ஒவ்வொருமுறை இவர்கள் அலுவலகதிற்கு உள்ளே/வெளியே செல்ல இந்த அட்டையை பயன்படுத்த வேண்டும். அதாவது இவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு மணித்துளியும் கணக்கிடப்படுகின்றன. ஆனால் ஊதியமாக இவர்களுக்கு வழங்கப்படுவது லாபத்தில் மிக சொற்பமான தொகை மட்டுமே.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைப்பதற்கான உரிமை இவர்களுக்கு வழங்க படுவதில்லை. முக்கியமாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.
ஒரே விதமான வேலையை செய்பவர்களுக்கு ஒரே அளவிலான ஊதியம் (EQUAL PAY FOR EQUAL WORK) வழங்கப்பட வேண்டும் என்னும் சட்டம் இங்கு செல்லுபடி ஆவதில்லை.
BPO- களில் பணியாற்றும் பெண்களின் நிலை இன்னும் சோகம் நிறைந்தது. பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளது. பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பதிவு செய்வதற்கான அமைப்பை அனைத்து தொழிலகங்களிலும் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் இயற்றிய சட்டம் பலபெண்களுக்கும் தெரியாமலே உள்ளது. மகப்பேறுக்கால விடுமுறை, பணிபுரியும் இடங்களில் குழந்தை பராமரிப்பு வசதிகள் என பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை எந்த BPO நிறுவனமும் வழங்குவதில்லை.
இந்தியர்கள் தற்போது மிகஅதிகமாக ஈடுபடும் BPO துறையில் கவனம் செலுத்த சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்காக போட்டியிடுகின்ற அந்நாட்டின் முக்கிய இரண்டு அரசியல் கட்சிகளும், அவுட்சோர்சிங் மூலம் உள்ளூர் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளன.
இந்த நிலையில் இந்திய BPO நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான். இந்த வேலை வாய்ப்பு பறிபோனால் இந்த இளைஞர்கள் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது சமூகத்தில் குற்றத்தின் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதை சமூகவியல் உண்மை.
என்ன செய்யப் போகிறோம்?
-மு. வெற்றிச்செல்வன்
(நன்றி: மக்கள் சட்டம்)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment