Tuesday, July 3, 2012

வருங்கால வைப்புநிதி பி.எஃப் (EPF) பற்றிய தகவல்கள் ...

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952 (en: The Employees Provident Funds Act - 1952) இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.

வருங்கால வைப்புநிதி சார்ந்த திட்டங்கள் :
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைச் சார்ந்து மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இதை இந்திய அரசு "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்" மூலம் செயல்படுத்தி வருகிறது.      தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம்     தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம்     தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்


வருங்கால வைப்பு நிதித் திட்ட இடைக்கால பலன்கள்

  • வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் வீடுகள் கட்டவும், வாங்கவும் கடன்களைப் பெற முடியும். ஆனால் இந்தக் கடன் பெறுவதற்கு அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்ப்த்தின் அடிப்படையில் அவரது 24 மாத கால சம்பளம் மற்றும் படித் தொகை அல்லது வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தாத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது)மற்றும் வட்டி ஆகியவை கணக்கிடப்பட்டு இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். வீடு கட்டப்படும் பொழுது 12 மாதச் சம்பளம் முன்பணமாக வழங்கப்படும்.
  • தொழிற்சாலை வேலை நிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்கள் தொழிலாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் தொழிலாளர்கள் பங்குச் சந்தாத் தொகைக்கான வட்டித் தொகையை விட அதிகமில்லாதத் தொகையை உதவித் தொகையாக அளிக்கலாம். அவ்வாறு வழங்கப்பட்ட தொகையை அத்தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்கள் சந்தாத்ந்தொகையில் பாதிக்கு அதிகமில்லாத தொகையினை கடனாக அளிக்கலாம். இக்கடன் தொகையைத் தொழிலாளர் பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
  • உறுப்பினர் நோய்வாய்ப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தால் இந்நிதியிலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டாத தொகையை உதவித்தொகையாகப் பெறலாம். ஆனால் இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதே வகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும்.
  • எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கச் சீற்றத்தினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது விண்ணப்பத்தின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் உதவித் தொகை வழங்கலாம்.
  • மின்வெட்டின் காரணமாக வேலை பாதிக்கப்படும் பொழுது வருமானத்தை இழந்து குறைந்த சம்பளத்தை பெறும் போது திருப்பித்தர வேண்டாத உதவித் தொகையைப் பெறலாம். இதற்கு மாநில அரசிடமிருந்து மின்வெட்டு குறித்த சான்றிதழும், சம்பளக் குறைவிற்கு மின்வெட்டுதான் காரணம் என்கிற நிர்வாகத்தின் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • உறுப்பினர்களின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கும், பெண் குழந்தைகளின் திருமணத்திற்கும் உதவித் தொகை பெற முடியும். ஏதாவது ஒரு குழந்தையின் மேற்படிப்புக்கு ஒரு முறையும், இரண்டு பெண்களின் திருமணங்களுக்கும் உதவித் தொகை பெற முடியும்.

வைப்பு நிதிக் கணக்கு முடித்தல்

தொழிலாளர்கள் கீழ்காணும் சில சூழ்நிலைகளில் வைப்பு நிதித் திட்டத்தில் தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு தங்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • உறுப்பினர் ஓய்வு வயதை அடைந்து விட்ட பின்பு அல்லது ஓய்வு பெறும் பொழுது பெறலாம்.
  • உடல் நிரந்தர தகுதியிழப்பினால் வேலை செய்ய இயலாமல் போகும் நிலையில் பெறலாம்.
  • வேலை நீக்கம் அல்லது ஆட்குறைப்பால் வேலை இழக்கும் நிலையில் பெறலாம்.
  • சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குப் பின்பு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று உறுதி அளித்து கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
ஏன் கால தாமதம்

இந்தியாவில் நாலரை கோடி Provident Fund எனப்படும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் தனது வைப்பு நிதியைப் பெற விரும்பி விண்ணப்பிக்கும்போது முழு செட்டில்மென்ட்டையும் முடிக்க 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. உண்மையில் ஒரு மாதம்தான் அதிகபட்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும் 6 மாதங்கள் வரை இழுத்து விடுகிறார்கள்.

வைப்பு நிதியைப் பெற வேண்டுமானால், வருங்கால வைப்பு நிதிக் கழகத்திடமிருந்து பார்ம் 19ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைக் கொடுத்தாகி விட்டது. சரி, அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது... அதற்கு இப்போது எளிதான வழி வந்து விட்டது. மீண்டும் மீண்டும் பிஎப் ஆபீஸுக்குப் போய் அலைவதை விட இருந்த இடத்திலேயே அதை அறிந்து கொள்ள இப்போது ஆன்லைன் டிராக்கிங் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதென்ன ஆன்லைன் வசதி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழகத்தின் இணையதளம் (www.epfindia.com) மூலம் இந்த டிராக்கிங்கை நாம் மேற்கொள்ள முடியும்.
இந்த இணையதளத்திற்குப் போய், அதில் நமக்கு எந்த சேவை தேவையோ அதை கிளிக் செய்தால், அதுதொடர்பான அத்தனை உதவிகளும் அங்கு காத்திருக்கிறது. உதாரணத்திற்கு, உங்களது வைப்பு நிதி விடுவிப்பு நிலவரம் withdrawal claim status என்ன என்பதை அறிய வேண்டுமானால், அதுதொடர்பான இணைப்பைக் கிளிக் செய்து உள்ளே போனால் விவரங்களை அறியலாம்.
அந்த இணைப்புப் பக்கத்தில், நாம் எந்த பிராந்தியத்தின் கீழ் வருகிறோமோ அந்த அலுவலகத்தை சொடுக்க வேண்டும். அதில் நமது இபிஎப் கணக்கு எண்ணைக் கொடுத்தால், உங்களது கணக்கின் நிலவரம் தெரிய வரும்.
அதேபோல உங்களது குறைகள், புகார்களையும் கூட ஆன்லைனிலேயே நாம் பதிவு செய்யலாம். நீண்ட காலமாக விண்ணப்பித்தும் பிஎப் பணம் வரவில்லை என்றால் இந்த குறை தீர்ப்புப் பகுதிக்குப் போய் விண்ணப்பிக்கலாம்.

செல்போனிலும் அலர்ட் பண்ணுவாங்க..
அதேபோல உங்களது இபிஎப் விண்ணப்பத்தில் உங்களது செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தால், செல்போன் மூலமும் அலர்ட்களை அனுப்புகிறது வைப்பு நிதி கழகம். உங்களது விண்ணப்பத்தைப் பெற்றவுடன் அதுதொடர்பான ஒரு எஸ்எம்எஸ் வந்து சேரும்.
நாடு முழுவதும் உள்ள 120 பிஎப் அலுவலகங்களில் தற்போது 118 அலுவலகங்கள் ஆன்லைன் செட்டில்மென்ட் வசதியுடன் கூடியதாக உள்ளன. இதனால் சேவை விரைவாகியுள்ளது, உறுப்பினர்களுக்கும் வேலை சுலபமாகியுள்ளது.

நன்றி:

விக்கிபீடியா & குட் ரிட்டன்ஸ்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls