Friday, December 19, 2014

அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்?

டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மீத்தேன் திட்டத்தை பற்றியும் அதன் தீங்கை பற்றியும் அனைவரும் அறிய ஒரு சிறு தொகுப்பை இங்கே பதிகிறேன்...

அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்?
தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள்?
பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் "நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு "(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.

நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

மீத்தேன் வாயு எதற்கு பயன்படுகிறது?
மீத்தேன் ஒரு மாற்று எரிசக்தியாக பயன்படுகிறது.
மீத்தேன் என்பது அடிப்படையான வளிமம் (வாயு – gas) ஆகும். இது ஹைட்ரோ-கார்பன் (கரிம-நீரதை, hydrocarbon) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூற்றுப் பொருள் (molecule). மீத்தேனில், ஒரு கார்பன் (கரிமம்) மற்றும் நான்கு ஹைட்ரஜன் (நீரகம்) தனிமங்களால் (CH4) ஆன வேதியியல் கலவைகள் நிறைந்திருக்கும். முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட மீத்தேனை நுகர்ந்தால் எவ்வித மணமும் இருக்காது, மீத்தேனிற்கு தனியான நிறமும் இல்லை. காற்றில் 5 முதல் 15 சதவிகதம் மீத்தேன் கலந்தால், அது வெடிப்பொருளாக மாறும் தன்மை உடையது. எளிதில் எரியக்கூடிய தன்மையுடையது மீத்தேன் என்பதால், கவனக்குறைவால் எற்படும் சிறு கசிவும் ஆபத்தைத் தரக்கூடியது. ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக, இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) சார்ந்த கலவையை சேர்த்து நெடி வீசக்கூடியத் தன்மையுடையதாக மாற்றுவார்கள்.

இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்பு?
1. நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.

2. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.

3.மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில்  கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.  (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point  என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த  மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.

4. நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.

5. இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் ,  தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.

6. மீத்தேன் எடுக்கும்  நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே  பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள். 

7. தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்   மக்கள்   தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

8. இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.

10. இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம்  மீது தவறுதலாக  தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.


கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்
  2. கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  3. கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  4. கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  5. இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!


தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls