Monday, July 16, 2012

இன்டர்வியூ-வாயிற்கதவு 1


வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ.'

எல்லாம் தெரிந்தவர்கள் கூட வட்டமேசை மாநாடு மாதிரி ஒன்றுக்கு மூன்று அதிகாரிகளை பார்த்ததும் பதட்டத்தில் வார்த்தைகளை தொலைத்தவர்களாகி விடுகிறார்கள். தெரிந்த கேள்விக்கும் தெரியாத மாதிரி இவர்கள் `பய' அபிநயம் பிடிப்பது இப்போதும் தொடர்கதை தான்.

தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் இதில் தான் இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பதால் இம்மாதிரியான இன்டர்வியூவுக்கு போகிறவர்கள் முதலிலேயே மனதுக்குள் ஒருவித படபடப்பை ஏற்றிக்கொண்டு விடுகிறார்கள். நாம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வீட்டில் தலைவாரி புறப்படும்போது மனதில் போட்ட தீர்மானம், இன்டர்வியூ அலுவலக படிக்கட்டில் கால் வைத்ததுமே மடிந்து போவது முதல் அத்தியாயம்.

உலகத்தலைவர்களின் பெயர்கள் தொடங்கி கடைசியாக சுதந்திரம் பெற்ற நாடுகள் வரை மனதில் புதைத்து எந்தக் கேள்வி என்றாலும் நான் ஓ.கே என்று புறப்பட்டுப் போகிறவர்களிடம், `நீங்கள் இந்த அலுவலகத்தில் எத்தனை படியேறி இன்டர்வியூவுக்கு வந்தீர்கள்?' என்று கேட்பவர்களும் உண்டு. சுற்றுப்புறத்தை கவனிக்கிறீர்களா, உங்களைச் சுற்றியுள்ள இன்னொரு உலகம் உங்கள் பார்வையில் படுகிறதா என்பதற்காக இப்படியெல்லாம் கூட கேட்டு அதிர வைப்பார்கள். இம்மாதிரியான சமயங்களில் பதில் தெரியவில்லை என்றால் `தெரியாது' என்பதையே பதிலாக்குங்கள். அதை விடுத்து தெரிந்த பதில் போலவும், அப்போது தான் மறந்த மாதிரியும் `ஆக்ட்' கொடுக்காதீர்கள்.

இன்டர்வியூவுக்காக காத்திருக்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறீர்கள். அங்கே உங்களைப் போலவே தேர்வுக்கு வந்த பலரையும் பார்க்கிறீர்கள். அப்போதே உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல் வந்து ஒட்டிக்கொள்கிறது. அதிலும் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கிற இன்டர்வியூ என்றால் கேட்கவே வேண்டாம். தேவதை மாதிரியான தோற்றத்தில் வந்ததோடு நில்லாமல், இன்டர்வியூ அறைக்குள் அழைக்கப்படவிருக்கும் அந்த வினாடியிலும் உதட்டுச்சாயத்தின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை அக்கறையாக பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் ரொம்பவே பயமுறுத்துவார்கள். அறிவால் முடியாததை அழகு சாதித்து விடுமோ என்று மனம் உள்ளுக்குள் படபடப்பை ஆரம்பித்து விடும்.

இதற்கெல்லாம் அடுத்த கட்டம், இன்டர்வியூ நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்திப்பது. அறைக்குள் அழைக்கப்பட்டதுமே டென்ஷன் இல்லாமல் அறைக்குள் நுழையுங்கள். உங்களை அழைத்து விட்டார்கள் என்பதற் காக தள்ளுகதவைத் தள்ளிக்கொண்டு நேரடியாக உள்ளே நுழைந்து விடாதீர்கள். `மே ஐ கம் இன் சார்?' என்று நாகரீகமாக கேட்டபடி அறைக்குள் நுழையுங்கள். உள்ளே நுழைகிற அந்தக் கணம் முதலே நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அந்தக்கணம் முதலே உங்களுக்கு இன்டர்வியூ ஆரம்பம் ஆகி விட்டதாகத்தான் பொருள். நீங்கள்அறைக்குள் எப்படி வருகிறீர்கள்? அதிகாரிகளை பார்த்து எப்படி வணக்கம் வைக்கிறீர்கள் என்பது முதல் உங்கள் தேர்வின் தொடக்கம்.

சில கேள்விகள் உங்களுக்கு சட்டென்று புரியாமல் இருக்கலாம். அதை `புரியவில்லை. தயவு செய்து திரும்பவும் கூற முடியுமா?' என்று கேட்டு அதன்பிறகு உங்கள் பதிலை சொல்லலாம். ஒருவேளை அந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், விடை தெரியவில்லை என்பதை தயக்கமின்றி கூறுங்கள். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றிரெண்டுக்கு பதில் தெரியாத பட்சத்தில் `தெரியவில்லை சாரி' என்று கூறி விடலாம்.

ஒருவேளை தெரியாதது என்று சொல்லி விட்டால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து கொண்டு சிலர் தவறான விடைகளை கூற முயற்சிக்கலாம். அது `ஒத்தையா ரெட்டையா' கதையாக அமைந்து உங்கள் வெற்றிக்கான வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஐந்து நிமிடம் தேர்வாளர் கள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் `சமாளிப்பாளரா? நேர்மையாக அணுகுபவரா' என்பதை கணித்து விடுவார்கள். கேள்விகள் முடிந்தது என்று அவர்கள் அறிவித்ததும், மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்படுங்கள்.

இளைஞன் ஒருவன் பல இன்டர்வியூக்களை கடந்தும் வேலை கிடைத்தபாடில்லை. அன்று ஒரு இன்டர்வியூவுக்காக கிளம்பிக் கொண்டிருந்தபோது அப்பா மகனிடம், "இன்று உனக்கு நடக்கும் இன்டர்வியூவை நடத்தும் அதிகாரிகளில் ஒருவர் என்னுடைய கிளாஸ்மேட். அதனால் உனக்கு வேலை நிச்சயம். தைரியமாக அட்டென்ட் செய்து விட்டு வா'' என்று அனுப்பி வைத்தார். மகனும் போனான். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் சொன்னான். ஒரு மாதத்தில் வேலைக்கான ஆர்டர் வீடு தேடி வந்தது. மகன் அப்பாவிடம், "அப்பா உங்கள் நண்பர் எனக்கு நல்லது செய்து விட்டார்'' என்றான், மகிழ்ச்சிமுகமாய்.. அப்பாவும் மகிழ்ந்தார்.

உண்மையில் இளைஞனின் அப்பாவுக்கு அந்த இன்டர்வியூவை நடத்திய அதிகாரிகளில் யாரும் நண்பர் கிடையாது. `இன்டர்வியூ' என்றதுமே உதறல் எடுக்கத் தொடங்கி, கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களை சொல்லி அதனால் மகனின் வேலை வாய்ப்பு கைகூடாமல் போனதை உணர்ந்தவர், மகனின் தன்னம்பிக்கைக்காக அப்படி ஒரு பொய்யை சொன்னார். அந்தப் பொய் மகனை வெற்றிக்கான நம்பிக்கையுடன் இன்டர்வியூவை எதிர்கொள்ள வைத்து விட்டது. இந்த குட்டிக்கதையின் நீதியாக தன்னம்பிக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பொய்யை விட்டு விடுங்கள்.
by vayal
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

sjs said...

really too good

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls