கோலி சோடாவுக்குள் ஒரு விஷயம் இருக்கு. அமைதியா வச்சிருந்தீங்கன்னா தாகம் தீர்க்க உதவும். அதையே ரொம்ப பிரஷர் கொடுத்தீங்கன்னா வெடிச்சு சிதறிடும். படத்துல வர்ற நான்கு பசங்களும் அப்படித்தான். கோயம்பேடு மார்க்கெட்டுல கிடைகிற வேலை செஞ்சு வாழுற பசங்க, அவுங்கள போயி டார்ச்சர் பண்ணினா என்னாகும்றது தான் கதை.
2009 ஆம் ஆண்டு வெளியான படம் பசங்க. பாண்டிராஜ் இயக்கிய அந்தப் படத்தில் முதன்மை வேடங்களில் நடித்திருந்த சிறுவர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகிய நால்வரையும் அவர்களின் இப்போதைய வயதுக்கேற்ற வேடத்தில் நடிக்க வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் விஜய்மில்டன்
நான் கூட ஏதோ விடலை பசங்களை வைத்து கொண்டு "துள்ளுவதோ இளமை" போன்ற கதைகளத்தில் படத்தை நகர்த்தி தொடையையும் துள்ளலையும் திணித்து பாலாக்கி இருப்பார்கள் என்ற தயக்கத்துடன் தான் திரையரங்குக்கு சென்றேன். ஆனால் படத்தில் துளியும் ஆபாசம் இல்லை.
மீசைமுளைக்கும் வயதில் இயல்பாக ஏற்படுகிற இனக்கவர்ச்சி அவர்களுக்கும் ஏற்படுகிறது. விடலை பருவத்தில் வரும் தூண்டலை ஆரம்பத்தில் காட்டி கதையை துவக்கினாலும் அடுத்த கணமே எந்த வித ஆபாச நெருடலையும் அதனுள் திணிக்காமல் பள்ளிமாணவிகளை வைத்துக் காதல்காட்சிகள், பாடல்கள் என்று எதையும் எடுக்காமல் அவர்களின் வாழ்கை முன்னேற்றத்தின் உழைப்பையும் வலியையும் சரியாக படமாக்கியுள்ளார்.
இரண்டு சிறுமிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்துள்ளனர். அதிலும் சோடாபுட்டியோடு பல்லெடுப்பாக இருக்கும் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட அந்த சிறுமி(சீதா) பல காட்சிகளில் நமது கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளார். அவ்வளவா லட்சணமில்லாத அந்த பொண்ணை 'அட்டு மேட்டர்’னு அர்த்தம் வர்ற மாதிரி 'ஏ.டி.எம்’னு பட்டப் பேர்வெச்சுக் கூப்பிடுவாங்க இந்தப் பசங்க. ஒரு கட்டத்துல அது அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சிரும். 'நான் நல்லாப் படிக்காம நீங்க என்னை மக்குனு சொன்னா, நான் வருத்தப்படுவேன். ஏன்னா, அது என் தப்பு. ஆனா, நான் அழகா இல்லாததுக்கு நானா காரணம்? அது என் தப்பில்லையே! நான் தப்பு பண்ணாதப்போ, நான் ஏன் வருத்தப்படணும்?’னு சொல்லுவா.
பசங்களுக்கு 'அழகு’ன்னா என்னன்னு புரிஞ்சுபோகும். அப்புறமும் அந்தப் பொண்ணை 'ஏ.டி.எம்’னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, இப்போ அதுக்கு அர்த்தம் 'அழகிய தமிழ் மகள்’. துளியும் உடல் கவர்ச்சியும் முகலட்சனமும் இல்லாத அந்த பெண்ணின் மனக்குமறல்களை மிக எதார்த்தமாக எடுத்துரைக்கும் போது அழகையும் கவர்ச்சியையும் எதிர்நோக்காமல் நான்கு பேர் மனதிலும் அவளின் மீது ஏற்படும் ஒருவித ஈர்ப்பும் ஆதரவும் அவளை ஏற்றுக்கொள்ள போட்டியிடும் தருணம் நம் அனைவரையும் உருக செய்துள்ளது.
இப்படிப் படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் அடுக்கிலும் நேர்மையை விதைச்சிருகார். ‘அடிச்சா திருப்பி அடிக்க நாங்க பெரிய ஆளுங்க இல்ல. ஆனா அடிவாங்கிட்டு சும்மா போக சின்ன பசங்களும் இல்ல என்ற
இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்
பொதுவாக சிறுவர்கள் சண்டையிட்டால் கைதட்டி ரசித்து அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகித்து திரைபார்வையை சற்று விலக்குவோம்,ஆனால் இவர்களில் வில்லனை தாக்கும் ஒவ்வொரு தாக்குதலும் துளியும் மிகைப்படுத்தாமல் சிறுவர்களின் கோபம் அவர்களின் வெறி அவர்களின் எண்ணம் என்ன எப்படி இருக்கும் என்பதை சரியாக திரையமைத்து இருக்கிறார்கள்.
சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர். தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு அந்த அனாதை பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும் தன் மகளை சைட் அடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களின் அறியாமை பருவக்கோளாறு என்று பெரிதுபடுத்தாமல் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும் எதார்த்த பரிவு கலந்த பாசம்.
நாயுடுவாக நடித்திருக்கும் தெலுங்குநடிகர் மதுசூதனனும் அவருடைய மைத்துனராக நடித்திருக்கும் வேல்முருகனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாதியை சொல்லி படமெடுக்க யோசிக்கும் தற்காலத்தில் வில்லன் மூச்சிக்கு முன்னூறு முறை நாயுடு, நாயுடு நாயுடுன்னா மார்கேட்டே நடுங்கும் சொல்லும் அளவிற்கு வசனங்களை துணிவோடு திணித்துள்ளார் இயக்குனர். (இதுவே வன்னியர் சம்மந்தமாக சாதியை திரையில் திணித்திருந்தால் மொத்த எழுத்தாளர்களும் இந்த படத்தை புறந்தள்ளி இருப்பார்கள் என்பது வேறு விஷயம்)
தண்ணி அடிச்சிட்டு வண்டி ஒட்டுறவன டாஸ்மாக் கடை வாசல்ல வைச்சே தடுக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு தள்ளி நின்னு பிடிக்கறீங்கன்னா பணம் பறிக்கத் திட்டம் போடுறீங்கன்னு தானே அர்த்தம்? அப்பறம் எதுக்கு டாஸ்மாக்ல எதுக்கு பைக் பார்க்கிங் வைச்சுருக்கீங்க என்ற வசனமும் சரி பை க்ல போ ய் குடிச்சிட்டு நடந்தா வீட்டுக்குப் போறது? ஆவின் பால் நஷ்டத்துல ஓடுது டாஸ்மாக் லாபத்துல ஓடுது ஆகிய வசனங்களை இமான் அண்ணாச்சி பேசும்போது சிந்திக்க வைத்தும் சிரிக்க வைத்தும் அரங்கமே அதிர்கிறது.
ரொம்ப யதார்த்தமான ஆர்ட் படமும் கிடையாது, ஒரு குத்து சாங், ஒரு பார் சாங். கொஞ்சம் லவ்வுன்னு கமர்ஷியல் படமும் கிடையாது. இதை தாண்டி மூன்றாவது வகையா இந்த படத்தை இயக்கி பாண்டிராஜ் போன்ற இயக்குனர் வரிசையில் விஜய்மில்டனும் நிச்சயம் இடம் பெறுவார் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.
சின்னச் சின்ன குறைகளை பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும். இயக்குநர் விஜய் மில்டனுக்கும், நடித்தவர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
கோயம்பேடு மார்கெட்
பசங்க :கிஷோர் - ஸ்ரீ ராம் - பாண்டி - முருகேஷ் - சாந்தினி -சீதா
பெரியவங்க : இமான் அண்ணாச்சி - சுஜாதா சிவகுமார் - மதுசூதனன்
கதை ,இயக்கம், ஒளிப்பதிவு - விஜய் மில்டன்
வசனம் - பாண்டிராஜ்
இசை - S.N அருணகிரி | பின்னணி இசை- A. சீலின்
தயாரிப்பு: பாரதி சீனி
விநியோகிப்பாளர் : லிங்குசாமி
இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..!
யாரும் பார்க்க தவறாதீர்கள்!
(வீரம் ஜில்லா "பெரிய" திரையில் பார்க்க தோணாமல் காத்திருந்த எனக்கு கிடைத்த அருமையான அழுத்தமான படைப்பு கோலிசோடா)
- தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment