Thursday, June 26, 2014

பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மட்டுமல்லாது தங்களுக்குப் பின்னர் சொத்துக்களை பராமரிக்கவும், அனுபவிக்கவும் நியமிக்கப்பட்ட வாரிசுகளை உடைய முதியோர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். 60 வயதைக் கடந்த அனைத்து முதியவர்களுமே இந்த சட்டத்தின் மூலம் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். தனி நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு, மாவட்டந்தோறும் முதியவர்களுக்கு தனியாக செயல்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் ஏற்படுத்துவதையும் இந்தச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் என்றால் பெற்ற குழந்தைகளை மட்டுமல்லாது பேரக்குழந்தைகளையும் உள்ளடக்கியது. பெற்ற குழந்தைகள், பேரக்குழந்தைகளால் கைவிடப்படும் நபர்கள் தங்களது வாழ்க்கை பொருளாதாரத் தேவைக்கான முறையீடுகளை மேற்கொள்ளலாம்.

இதற்கான மனுக்களை முதியோர் தங்களாகவோ, பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யலாம். தீர்ப்பாயங்கள் தன்னிச்சையாகவும் மனுக்களை எடுத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. பொருளுதவி கோரும் மனுக்களை 90 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணையிட வழிவகுத்துள்ளது. இடைக்கால நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்படும். குழந்தைகள், உறவினர்கள் மீது ஒரே மனுவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிவாரணம் பெறலாம். தீர்ப்பாயத்தில் ஆணையிட்டு வாழ்க்கைப் பொருளுதவியோ, மனு செலவினங்களுக்கோ உரிய தொகை வழங்கவில்லையெனில் தொடர்புடையோருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மாவட்டந்தோறும் இயங்கும் இந்த வாழ்க்கைப் பொருளுதவி மன்ற தீர்ப்பாயத்தில் விசாரனை எளிமையாகவும், விரைந்தும் நடைபெறும். தற்போது, அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்களோ, மாவட்ட வாழ்க்கைப் பொருளுதவி அலுவலராகச் செயல்படுவர். சட்ட விதிமுறைகள் அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வந்து 1 மாத காலமே ஆகிறது. சட்ட விதிமுறைகள் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டு மாவட்டந்தோறும் தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls